ரேஷன் கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்குவதாக புகார்
ராணிப்பேட்டை, சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை, சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எடை குறைவாக
ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசால் வழங்கப்படுகின்றது. இவைகளில் அரிசி இலவசமாகவும், மற்ற பொருட்கள் விலை குறைவாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் போது அவை எடை குறைவாக நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் 1 கிலோவிற்கு 50 கிராம் முதல் 250 கிராம் வரை குறைத்தே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், எடை குறைவை கண்காணிக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் ரேஷன் கடைகளை ஆய்வு செய்து நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்று கண்காணித்து, எடை குறைவாக வழங்கும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உபயோகிக்கும் ரேஷன் கடை பொருட்களை எடை சரியாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும் என்பதே நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.