இறுதி கட்டத்தை எட்டிய தொகுப்பு வீடுகள் பணி


இறுதி கட்டத்தை எட்டிய தொகுப்பு வீடுகள் பணி
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொகுப்பு வீடுகள்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முள்ளன்வயல் அருகே புதுச்சேரி, நம்பியார்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆதிவாசி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீடுகளில் தங்கி இருந்தனர். இதனால் மழைகாலங்களில் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் மனு கொடுத்தனர். இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக புதிய கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க கூடலூர் ஒன்றிய அதிகாரிகளுக்கும், நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு

அதன்படி பசுமை குடில் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டங்களின் கீழ் 12 புதிய தொகுப்பு வீடுகளை ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது. தற்போது அந்த பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணியை ஆணையாளர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம், ஊராட்சி பொறியாளர் ரமேஸ்குமார், பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் பணியை விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டனர்.

புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படுவதால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதற்கு காரணமான அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story