சீரமைப்பு பணிகள் நிறைவு:கீழ்பவானி வாய்க்காலில் இன்று மீண்டும் தண்ணீர் திறப்புசெயற்பொறியாளர் திருமூர்த்தி தகவல்


சீரமைப்பு பணிகள் நிறைவு:கீழ்பவானி வாய்க்காலில்  இன்று மீண்டும் தண்ணீர் திறப்புசெயற்பொறியாளர் திருமூர்த்தி தகவல்
x

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், இன்று (சனிக்கிழமை) மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், இன்று (சனிக்கிழமை) மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

சீரமைப்பு பணிகள்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை செய்வதற்காக அரசின் தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் கசிவு நீர் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் மற்றொரு தரப்பு விவசாயிகள் சிதிலமடைந்த பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. அங்கு கரைகளை பலப்படுத்துவது, மதகுகளை சீரமைப்பது, தேவைப்படும் கரைகளில் கான்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன.

தண்ணீர் நிறுத்தம்

இதற்கிடையே ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்தும் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும், பல இடங்களில் வாய்க்காலில் இறங்கியும் போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 15-ந் தேதி மாலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் சுமார் ஒரு மணிநேரத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். வாய்க்காலில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால் தண்ணீர் நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் திறப்பு

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கீழ்பவானி வாய்க்காலில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருந்ததாவது:-

கீழ்பவானி வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நாளை (அதாவது இன்று) பகல் 11 மணிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். மேலும், படிப்படியாக வாய்க்காலின் முழு கொள்ளளவு உயர்த்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஇருந்தார்.


Related Tags :
Next Story