கைதிகளுக்கு கணினி பயிற்சி மையம்
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
வேலூர் மத்திய ஜெயில் நிர்வாகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில் வளாகத்தில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய ஆண்கள் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர்விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கணினி பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ்புஜாரி வழிகாட்டுதலின்படி ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு யோகா, விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின் மூலம் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இங்கு கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு எம்.எஸ்.ஆபிஸ் பற்றி முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்களது கணினி திறனை வளர்த்து கொண்டு, விடுதலைக்கு பின்னர் கணினி தொடர்பான தொழில் தொடங்கி வருவாய் ஈட்ட முடியும் என்றனர்.