அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வீட்டுவரியில் சலுகை


அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வீட்டுவரியில் சலுகை
x

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்களை ஈர்க்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவரின் பயணப்படி அமர்வு படியில் இருந்து "வீட்டு வரி" செலுத்துவது என்று கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்களை ஈர்க்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவரின் பயணப்படி அமர்வு படியில் இருந்து "வீட்டு வரி" செலுத்துவது என்று கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வடபழஞ்சி ஊராட்சியின் கீழ் மே தினத்தையொட்டி தென்பழஞ்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்விமணி தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலக உதவியாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பரமசிவம் வரவேற்று அஜெண்டாவில் உள்ள தீர்மானங்கள் குறித்து வாசித்தார்.

கூட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் கல்வி தரத்தை உயர்த்தும் பொருட்டும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

வீட்டு வரியில் சலுகை

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் அமர்வு படி, மற்றும் பயணப்படியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்ககூடிய குழந்தைகளின் அனைத்து பெற்றோர்களுக்கும் "வீட்டு வரியை "செலுத்துவது என்று மக்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தனக்கன்குளம் ஊராட்சியில் தலைவர் ஆனந்திபாண்டி மோகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு பிரிவு) சுபாஷினி, துணைத்தலைவர் தன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதிசெல்வம், தவமணிமாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வடிவேல் தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில் ஊக்கத்தொகை உள்பட பல்வேறு சலுகை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்காக கள்ளர்சீரமைப்பு பள்ளியை அரசு பள்ளியாக மாற்றக் கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

முன்னதாக தனக்கன்குளம் ஊராட்சி பைரவர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மக்களுக்கு பாதை வசதி செய்து கொடுத்தமைக்காக ஊராட்சி மன்றதலைவர் ஆனந்தி பாண்டியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story