கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம்:விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லாமல் பிரச்சினையை சுமுகமாக முடிக்கவே செயல்படுகிறேன்;ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி ஆதங்கம்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம்:விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லாமல் பிரச்சினையை சுமுகமாக முடிக்கவே செயல்படுகிறேன்;ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி ஆதங்கம்
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதில் விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லாமல் பிரச்சினையை சுமுகமாக முடிக்கவே நான் செயல்படுகிறேன் என்று விவசாயிகள் கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி ஆதங்கத்துடன் பேசினார்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதில் விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லாமல் பிரச்சினையை சுமுகமாக முடிக்கவே நான் செயல்படுகிறேன் என்று விவசாயிகள் கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி ஆதங்கத்துடன் பேசினார்.

அமைச்சர் சு.முத்துசாமி

கீழ்பவானி வாய்க்காலில் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இதை முன்னிட்டு கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் கீழ்பவானி திட்ட வாய்க்கால் சீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்கேய சிவசேனாபதி உள்பட 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கரை உடைப்பு

கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்கால் என்பது எனது தொகுதியிலும் உள்ளது. எனது தொகுதி விவசாயிகள் சார்ந்த பிரச்சினையாகவும் இருக்கிறபோது எப்படி ஒரு பக்கம் சார்ந்து செயல்படுவேன் என்று நினைக்கிறீர்கள். கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டபோது நான் சென்னையில் இருந்தேன். அதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைவாக வந்து, உடனடியாக கரை உடைப்பை சரி செய்ய பணிகளை முடுக்கி விட்டேன். நான் அங்கேயே இருந்து பணிகள் செய்தது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஏன் அப்படி செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்கால் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. கரை உடைப்பு ஏற்பட்டால் அதை காரணம் காட்டி வேறுவகையான முடிவுகளை கோர்ட்டு எடுத்துவிடக்கூடாது.

10 நாட்களில் உடைப்பை சரிசெய்து தண்ணீர் விட்டதால், அந்த பிரச்சினை கவனத்துக்கு வரவில்லை. இதுவே 10 நாட்களில் தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தால் நிலை வேறுமாதிரி ஆகி இருக்கும். ஆனால் நான்தான் பணிகளை தடுக்கிறேன் என்றும், கான்கிரீட் போட ஆதரவாக இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

சுமுகமாக முடிக்க...

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்கனவே உள்ள மதகு பகுதிகள், பாலங்கள், பழுதடைந்த கட்டமைப்பு பகுதிகளை கணக்கெடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து அந்த பணிகளையாவது தொடங்க வேண்டும். அதன் மூலம் பிரச்சினையை கோர்ட்டு கையில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க முடியும். விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லாமல் பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் செயல்படுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தனது ஆதங்கங்களை தெரிவித்தார்.

கூட்டத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பில் மே மாதம் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பணிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வாசித்தார். அப்போது விவசாயிகள் தரப்பில் கலந்து கொண்ட கார்த்திகேய சிவசேனாபதி பேசும்போது, கீழ்பவானி சீரமைப்பு பணிகள் நடந்தால் வாய்க்கால் கரையில் உள்ள 4 லட்சம் மரங்கள் வெட்டப்படும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் 8 ஆயிரம் மரங்கள் மட்டுமே இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இது சரியா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பதில் கூறும்போது குறைகளை நாம் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நாம் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் அதைப்பற்றி பேசி முடிவு செய்வோம் என்று கூறினார்.

-------------

பாக்ஸ்

---------

கீழ்பவானி வாய்க்காலில்

பழைய கட்டுமான பணிகள் 1-ந் தேதி தொடங்கும்

அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

கூட்ட முடிவில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கருத்துகளை தெரிவித்தனர். அதனை கேட்டபோது, வாய்க்காலில் ஏற்கனவே உள்ள பழைய கட்டுமான பணிகளை தொடங்குவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். எனவே நீர் வளத்துறையின் மூலம் பழைய கட்டுமான பணிகளை வருகிற 1-ந் தேதி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்கால்களின் மதகுகளில் உள்ள அடைப்பான்கள் (ஷட்டர்கள்) பழுது ஏற்பட்டு வருவதை நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து பழுதுகளை நீக்க வேண்டும் என்றும், அதில் முன்னுரிமை அளித்து பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் அளித்து இருக்கிறார்கள். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கூட்டத்தில் பயிற்சி உதவி கலெக்டர் என்.பொன்மணி, கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பி.முத்துசாமி, பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் கவுதமன், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story