போலீசாரை கண்டித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பவானி வக்கீல்கள் மனு
பவானி வக்கீல்கள் மனு
பவானி பார் அசோசியேசன் தலைவர் ஆண்டவன் தலைமையில் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பவானி வக்கீல் சங்க பொருளாளர் விஜயக்குமார் கடந்த 22-ந்தேதி காலை அவரது சொந்த ஊரான ரெட்டியபாளையம் பொது வழியில் சென்ற போது அவரை வழிமறித்து அவரது வழக்கின் எதிர்தரப்பினர் வக்கீல் தொழிலை கேவலப்படுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, எதிராக வழக்கில் வாதாடினால் கை, கால்களை முறித்துவிடுவேன் என பேசியதின் அடிப்படையில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் பணியில் இருந்த போலீசார் வழக்கு பதியவில்லை. மாறாக எதிர் தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். வழக்கு பதிவு செய்யவில்லையெனில் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்ட போலீஸ்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.