கே.எஸ்.அழகிரியை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
கே.எஸ்.அழகிரியை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அந்த மாவட்டத்தில் நடந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடந்த 15-ந்தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்காரர்களை, கட்சி அலுவலகத்தில் சிலர் காயங்கள் ஏற்படுத்தும் வகையில் தாக்கியுள்ள செயல் கண்டிக்கத்தக்கது. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உண்மையிலேயே அங்கு ஆட்களுடன் சென்று தவறு செய்திருந்தால் அவர் மீதும், மாநில தலைவர் மீதும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு தலைவரும், பொருளாளரும் மட்டுமே பொறுப்பு. அதில் ஒருவர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரியானது அல்ல. மாநில தலைவர், வட்டார மற்றும் நகர தலைவர்களை பார்ப்பது கிடையாது. அடிமட்ட நிர்வாகிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயலை கண்டிக்கும் வகையில், எனது பதவியை ராஜினாமா செய்து அவருக்கு தபால் அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
--------------