மத்திய அரசை கண்டித்துடிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்
மத்திய அரசை கண்டித்து, டிராக்டர், மோட்டார்சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம் சென்றனர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மத்திய அரசை கண்டித்து தேனியில் டிராக்டர் ஊர்வலம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோவில் முன்பு விவசாயிகள் நேற்று மாலை கையில் தேசியகொடியுடன் திரண்டனர். டிராக்டர்களை கொண்டு வர போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், 2 டிராக்டர் மட்டும் அங்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார். இதில், எஸ்.யு.சி.ஐ. மாநில செயலாளர் ரங்கராஜ், அகில இந்திய மகளிர் கலாசார சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜப்பன், விவசாய விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 2 டிராக்டர்கள் மற்றும் ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் அல்லிநகரம், நேரு சிலை சிக்னல், பழைய பஸ் நிலையம் வழியாக பங்களாமேடு பகுதியில் நிறைவடைந்தது.