அதிக அபராதம் விதிப்பதை கண்டித்து சரக்கு வாகன டிரைவர்கள் போராட்டம்
அதிகஅபராதம் விதிப்பதை கண்டித்துசரக்கு வாகன டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரைவர்கள் போராட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் அணிவகுத்து வந்தன. மினிவேன், சரக்கு ஆட்டோ என அணிவகுத்து வந்த அந்த வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அந்த வாகனங்களில் தொடர் போராட்டம் என்ற பெயரில் 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
பின்னர் அந்த வாகனங்களின் டிரைவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்டத்தில் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் இலகு ரக வாகனங்களின் மீது அதிக அபராதம் விதிப்பதை கண்டித்து போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதிக அபராதம்
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இலகுரக வாகனங்களுக்கு போலீசார் அதிக அபராதம் விதித்து வருகின்றனர். வாகனத்தை நிறுத்தாமல் சாலையோரம் நின்று கொண்டு வாகனத்தின் பதிவு எண்ணை குறித்துக் கொண்டு ரூ.500 முதல் பல மடங்கு வரை அபராதம் விதிக்கின்றனர். போலீசார் விதிக்கும் அபராத தொகையை செலுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்.
தோட்டங்களுக்கு கூலியாட்களை அழைத்துச் சென்று தான் சரக்குகளை ஏற்ற முடியும். ஆனால், கூலியாட்களை அழைத்துச் சென்றாலும் அபராதம் விதிக்கின்றனர். எனவே இந்த வாகன திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, அதிக அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். அதை வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம்" என்றனர்.
12 பேர் கைது
தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடவடிக்கையை கண்டித்தும், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி
இதேபோல் ஆண்டிப்பட்டியில் சரக்கு வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சரக்கு ஆட்டோக்கள் சங்க தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி சரக்கு ஆட்டோக்கள் நிறுத்த தலைவர்கள் சின்னா, முருகன், தங்கப்பாண்டி, அழகுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா அலுவலகம் முன்பு நின்று ஆன்லைனில் வழக்குகள் மற்றும் அபராதம் விதிப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஆண்டிப்பட்டி தலைமையிட வட்டாட்சியர் உமாதேவியிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர். அப்போது ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக கூறினர்.