ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் அமைக்காததை கண்டித்து குடிநீர் லாரியை பொதுமக்கள் முற்றுகை; சென்னிமலை அருகே பரபரப்பு


ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் அமைக்காததை கண்டித்து   குடிநீர் லாரியை பொதுமக்கள் முற்றுகை;  சென்னிமலை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 2:27 AM IST (Updated: 17 Oct 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் அமைக்காததை கண்டித்து குடிநீர் லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் அமைக்காததை கண்டித்து குடிநீர் லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஆழ்குழாய் கிணறு

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்டது மைலாடி காந்திநகர். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் வசதி செய்யப்படவில்லை எனக்கூறி கடந்த 1-9-2022 அன்று முருங்கத்தொழுவு ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

அதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் மைலாடி காந்தி நகர் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் பொருத்துவதற்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் இதுவரை திட்ட மதிப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று மைலாடி காந்திநகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய லாரி சென்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்று லாரியை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி தலைவர் பிரபா தமிழ்செல்வனிடம் லாரி தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை.

ஆழ்குழாய் கிணறு அமைத்தும் ஏன் மின் மோட்டார் பொருத்த காலதாமதம் செய்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மின் மோட்டார் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி தலைவர் பிரபா தமிழ்செல்வன் கூறினார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story