அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது. அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும். மின்வாரிய அரசாணை எண் 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாக தொடர வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. அதற்கு தேனி கிளை தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தின் போது ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் பலர் சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.