நூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தம்


நூல் விலை உயர்வை கண்டித்து  நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தம்
x

நூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் 15 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

தேனி

நூல் விலை உயர்வு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உயர்தர காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு வழங்கும் வேட்டி, சேலைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் வேட்டி, சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

ஆனால் நெசவாளர்களுக்கு அதற்கேற்ப லாபம் கிடைக்கவில்லை. மேலும் உற்பத்தி பொருட்களின் விலையையும் உயர்த்த முடியவில்லை. இதனால் நெசவாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

வேலைநிறுத்த போராட்டம்

இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள நெசவாளர்கள் இன்று முதல் 15 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அடுத்த (ஜூன்) மாதம் 12-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் நெசவாளர்கள் ஈடுபட உள்ளனர். வேலைநிறுத்தம் எதிரொலியாக, டி.சுப்புலாபுரத்தில் உள்ள தறிக்கூடங்கள் மூடப்பட்டன. நூல்விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த நெசவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, சுமார் ரூ.25 கோடி மதிப்பில் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நெசவாளர்கள் தெரிவித்தனர்.


Next Story