கனியாமூர் கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்


கனியாமூர் கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
x

கனியாமூர் கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய விழுப்புரம் நீதிமன்றம், அவர்கள் ஒவ்வொருவரும் அருகில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் 10 மரக்கன்றுகள் நடும்படி உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்து கடலூர், வேலூர், திருச்சி ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர்.

64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைதானவர்களில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கனியாமூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 296 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன், 45 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். அதோடு 174 பேர் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும். மேலும் 13 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

10 மரக்கன்றுகளை நட...

மேலும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 64 பேரும் தனித்தனியாக ரூ.10 ஆயிரத்தை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் செலுத்த வேண்டும், 64 பேரும் அவரவர் உள்ளூர் முகவரியில் உள்ள பிராந்திய நிலையில் வரக்கூடிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விடுமுறை நாட்கள் உள்பட மறு உத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என இரு வேளையும் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள், அவர்கள் இருப்பிடம் அருகில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் 10 மரக்கன்றுகளை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து பிராந்திய எல்லையில் வரக்கூடிய குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சமர்பிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்து மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.


Next Story