மத்திய-மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? பட்டதாரி இளைஞர்கள் கருத்து
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா என்பது குறித்து பட்டதாரி இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளர்.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.
பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பிரதமர் மோடி அதிரடி
'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன வழங்கும் முகாமையும் அவர் தொடங்கிவைத்தார்.
மு.க.ஸ்டாலினின் பெருமிதம்
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழக போலீஸ்துறையில் 3 ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பு முகாம்
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பவை பற்றி தேனி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் வெளிப்படுத்திய கருத்துகளைப் பார்ப்போம்.
தனியார் வங்கி
இளம்பரிதி (கோம்பை) :- நான் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். சென்னையில் தனியார் நிறுவனங்களில் 4 ஆண்டுகள் பணியாற்றினேன். குறைந்த ஊதியம் என்பதால் கட்டுப்படியாகவில்லை. தற்போது தனியார் வங்கியில் வாகன கடன் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். பிரதமர் மோடி சமீபத்தில் ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கியது வரவேற்கத்தக்கது.
தமிழகத்திலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அரசு துறைகளில் இன்னும் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றை நிரப்பவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
ஆறுதல் அளிக்கிறது
பிரவீன்குமார் (பூசானம்பட்டி) :- நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து விட்டு தற்போது விவசாயம் செய்து வருகிறேன். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் கிடைக்கும் பணிக்கு பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை இன்னும் அதிகரிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் பட்டப்படிப்பை முடிக்கின்றனர்.
போலீஸ் துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை போன்றவற்றில் மக்கள் தொகை பெருக்கம், குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசு துறைகளில் இன்னும் அதிக பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசுகளின் செயல்பாடுகள் ஆறுதல் அளிக்கிறது.
தேர்வு முடிவுகள் தாமதம்
ராம்குமார் (சிலமலை) :- நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். சென்னையில் 2 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். போதிய சம்பளம் இல்லாததாலும், கொரோனா பரவியதன் காரணமாகவும் சொந்த ஊருக்கு வந்து விட்டேன். அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளுக்கு தனிக்கவனம் செலுத்துவது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
அதே நேரத்தில், ரெயில்வே பணிக்கான தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு போன்றவை அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்வு முடிவுகள் தாமதமாகவே வெளிவருகிறது. தேர்வுகளை அடிக்கடி நடத்தி, முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும். ரெயில்வே தேர்வு 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தான் தேர்வு நடந்தது. அடுத்த ஆண்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றபடி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதால் மட்டும் வேலை கிடைத்து விடுவது இல்லை.
ெதாழில் முனைவோர்
பாலாஜி (போடி) :- நான் எம்.பி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். தமிழக அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது நல்ல விஷயம். பலரால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், முன்னேறவும் முடியும். படித்து முடித்துவிட்டு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
அவர்களுக்கு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் இன்றைய இளைஞர்கள் தொழில்முனைவோர்களாகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்திகளாகவும் மாற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐ.டி. துறையிலும்...
மத்திய-மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருவது படித்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு துறைகளில் சுணக்கம் குறைந்து பணிகள் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்துள்ளது.
கொரோனாவால் ஆட்டம் கண்ட தனியார் துறையும் தற்போது ஆட்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருப்பது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.