கண்டக்டர் வீட்டின் பொருட்கள் சூறை
காதல் விவகாரத்தில் கண்டக்டர் வீட்டில் பொருட்கள் சூறையாடப்பட்டது.
உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் ரகுகாந்தி (வயது 29). இவர் தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர், தனியார் கல்லூரியில் படித்து வந்த 19 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ரகுகாந்தியையும், அந்த மாணவியையும் காணவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலார்பட்டிக்கு வந்ததாக தெரிகிறது. அங்கு ரகு காந்தி வீடு பூட்டி இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் மாலையில் ரகுகாந்தியின் தந்தை மணி வீடு திரும்பிய போது பொருட்கள் சேதமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.