நல்லம்பள்ளியில் உணவு செறிவூட்டல் கருத்தரங்கம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய உணவு பொருட்களின் பயன்பாடு மற்றும் உணவு பொருட்களில் செறிவூட்டல் நடைமுறை குறித்த கருத்தரங்கு நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹமீதா பானு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறுதானிய உணவு பொருட்களின் கண்காட்சியை டாக்டர் பானு சுஜாதா பார்வையிட்டு மாணவிகள் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என பேசினார்.
உணவு செறிவூட்டல் வள மையம் டெல்லி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்திய மக்கள் தொகையில் 19 முதல் 45 வயது பெண்கள் 56 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனை தடுப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் குறைந்தபட்சம் ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துகளை பாதுகாப்பான முறையில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் அரிசி, கோதுமை, பால், சமையல் எண்ணெய் மற்றும் உப்பு ஆகிய உணவு பொருட்களுக்கு செறிவூட்டல் அங்கீகாரம் அளித்துள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா மற்றும் இயற்கை சித்தா டாக்டர் சுமதி, காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை தாவரவியல் பேராசிரியை அமுதா தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி கோகிலா நன்றி கூறினார்.