மகனின் திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக் கட்டினோம்-லாரி டிரைவர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்
மகனின் திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக் கட்டியதாக லாரி டிரைவர் கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆத்தூர்:
லாரி டிரைவர் கொலை
ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (வயது 40), லாரி டிரைவர். இவர், கடந்த 24-ந் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
திருமணத்துக்கு இடையூறு
சீனிவாசனுக்கும், எங்களுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக ஊரில் பஞ்சாயத்து மற்றும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மேலும் என்னுடைய மகனுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தோம். அதற்கு இடையூறு செய்து வந்தார். இதனால் சீனிவாசன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
எனவே மோட்டார் சைக்கிளில் பைத்தூர் கிராமம் வழியாக ஆத்தூர் சென்ற போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை வழிமறித்து குத்தி கொன்று விட்டு தப்பி ஓடி விட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.