இழப்பீடு தொகை வழங்காததால் தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி
நில உரிமையாளருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன. அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
அரூர்:
நில உரிமையாளருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன. அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
இழப்பீடு தொகை
அரூர் அருகே உள்ள சட்டையம்பட்டியை சேர்ந்தவர் மாரக்கவுண்டர் (வயது 85). இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க கையகப்படுத்தினார். இந்த நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்காததால், மாரக்கவுண்டர் 2004-ம் ஆண்டு தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் 2008-ம் ஆண்டு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு மாரக்கவுண்டருக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்காததால் மாரக்கவுண்டர் கடந்த 2015-ம் ஆண்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து கடந்த மாதம் வட்டி, அசல் என மொத்தம் 22 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் தாசில்தார் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இழப்பீடு தொகை வழங்காததால் மாரக்கவுண்டர் வழக்கீல் ராஜா மற்றும் சார்பு நீதிமன்ற அமீனா ஆகியோருடன் நேற்று முன்தினம் அரூர் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி நடவடிக்கைக்கு சென்றனர்.
அங்குள்ள மேஜை, நாற்காலி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் வெளியே எடுத்து வந்து வைத்தனர். அப்போது, மாரக்கவுண்டர் மற்றும் வக்கீல் ராஜாவுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது