1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகாசியில் காரில் கடத்தப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி,
சிவகாசியில் காரில் கடத்தப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சொகுசு கார்
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு போலீசாருக்கு சொகுசு காரில் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் பஸ் நிலையம் அருகே அந்த சொகுசு காரை மடக்கி பிடிக்க காத்திருந்தனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 2 வாலிபர்கள் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் அந்த சொகுசு காரை சோதனை செய்தனர்.
1½ டன் ரேஷன் அரிசி
அப்போது அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகாசியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.