காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று மடக்கினர்
ஜோலார்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய காரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் விட்டிச்சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய காரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் விட்டிச்சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பக்கரிதக்கா பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி அதி வேகமாக வந்த காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்று கட்டேரி பகுதியில் காரை மடக்கினர்.
உடனே காரை நிறுத்தி விட்டு டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடி விட்டனர். போலீசார் காரை சோதனை செய்தபோது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
பறிமுதல்
அதைத்தொடர்ந்து அந்த காரை போலீசார் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஜோலார்பேட்டையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று ரேஷன் அரிசி கடத்திய காரை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.