தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த ஊழியர்களால் பரபரப்பு


தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த ஊழியர்களால் பரபரப்பு
x

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சி களரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயி. இவர் இறந்து விட்டார். காளியப்பனுக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை கடந்த 1993-ம் ஆண்டில் எடுத்துக்கொண்டது. இதற்கு அப்போது அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு தொகை வழங்கியது. ஆனால் அது போதுமானதாக இல்லை என்று அவரது குடும்பத்தின் சார்பில் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ரூ.10 லட்சத்து 81 ஆயிரத்து 595 இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இழப்பீடு தொகையை வழங்காததால் கடந்த மாதம் ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி தீன தயாளன் ராசிபுரம் தாசில்தார் அலுவலக ஜீப், கம்ப்யூட்டர் உள்பட தளவாட சாமான்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் கோர்ட்டு ஊழியர்கள் பாபு மற்றும் லோகேஷ் ஆகியோர் விவசாயி காளியப்பனின் பேரன் பசுபதி வழக்கறிஞர் குமார் ஆகியோருடன் நேற்று தாலுகா அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய சென்றனர். தாசில்தார் சரவணன் இழப்பீடு தொகையை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கால அவகாசம் வேண்டும் என்றும் எனவே பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது என்று தெரிவித்தார். தாசில்தாரின் வேண்டுகோளின் ஏற்று கோர்ட்டு ஊழியர்கள் பொருட்களை ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


Next Story