ஆட்டோவில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


ஆட்டோவில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

கோவில்பட்டியில் ஆட்டோவில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்பப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் சத்ய பாமா, தனிப்பிரிவு அருண் விக்னேஷ் மற்றும் போலீசார் நேற்று கோவில்பட்டி கருணாநிதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் (வயது 39) என்பதும், அவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.6,120 மதிப்புள்ள 30 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் இனாம்மணியாச்சி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது 20) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 1,410 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story