நண்பர்களுக்குள் மோதல்; 5 பேர் மீது வழக்கு
களக்காட்டில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
களக்காடு;
களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் அஸ்வின் (வயது 21). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவில் இவர் தனது நண்பர்களுடன் களக்காடு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அவரது நண்பரான பஸ்நிலையம் கீழத்தெருவை சேர்ந்த சரவணன் மகன் சங்கர் (21) தனது நண்பர்களுடன் வந்தார். இருவரும் பேசிக் கொண்டு இருந்தபோது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. சங்கர், அவரது நண்பர் சிவபெருமாள் (25) ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர்.
இதேபோல அஸ்வின் மற்றும் அவரது நண்பர்கள் வினிஸ் (23), ரவி (21) ஆகியோர் சேர்ந்து சங்கரின் நண்பரான பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீராமன் (21) என்பவரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக சிவபெருமாள், சங்கர், அஸ்வின், வினிஸ், ரவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.