அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடையே தகராறு


அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடையே தகராறு
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

அரசு உயர்நிலைப்பள்ளி

திருக்கோவிலூர் அருகே கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சத்துணவில் முட்டை சரிவர வழங்கவில்லை என மாணவர்கள் தெரிவித்த புகாரின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் சத்துணவு பொறுப்பாளரிடம் தட்டிக்கேட்டனர்.

மேலும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கூறியதாகவும், ஆதிதிராவிட மாணவர்களை சாதி ரீதியாக அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியர்களிடையே தகராறு

இது தொடர்பாக தலைமை ஆசிரியருக்கும், சில ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாணவர்கள் முன்னிலையிலேயே தகராறு நடந்ததாகவும் தெரிகிறது.

இது பற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னா் அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழுவினர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

3 ஆசிரியர்கள் இடமாற்றம்

இதையடுத்து 3 ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மாற்றுப்பணி வழங்கி இடமாறுதல் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக 3 ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு உத்தரவிட்டுள்ளோம். மாணவர்களை சாதி ரீதியிலான வன்கொடுமை பேச்சு குறித்து உரிய ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story