காதல் தகராறில் இரு தரப்பினர் மோதல்
கூத்தாநல்லூர் அருகே காதலன் கட்டிய தாலியை மறைத்து பெற்றோருடன் வசித்து வந்த பெண் காதலுடன் ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் சின்னக்கொத்தூர் தெருவை சேர்ந்த ரவி மகன் தினேஷ்(வயது 20). பொக்லின் எந்திர டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் புவனேஸ்வரியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தினேசும், புவனேஸ்வரியும் ஒரு கோவிலில் திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டனர். தினேஷ் கட்டிய தாலியை மறைத்து பெற்றோர் வீட்டிலேயே புவனேஸ்வரி வசித்து வந்தார்.
வீட்டை விட்டு ஓட்டம்
இதனை அறியாத ரமேஷ் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்து வந்தார். இதனையறிந்த புவனேஸ்வரி, காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.இதனால், தினேஷ் குடும்பத்தினருக்கும், புவனேஸ்வரி குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தினேசும், புவனேஸ்வரியும் தீபாவளி அன்று சின்னக்கொத்தூருக்கு வந்தனர்.
இரு தரப்பினர் மோதல்
இதனையறிந்த புவனேஸ்வரியின் உறவினர்கள், தினேஷ் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உருட்டுக்கட்டை, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் பெரியகொத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த தமிழரசன்(26) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதேபோல மற்றொரு தரப்பை சேர்ந்த விக்னேசுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இவர்களில் தமிழரசன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், விக்னேஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
5 பேர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த ரமேஷ்(42), அரிகரன்(22), சக்திவேல்(21), ரவி(55), அவரது மகன் தினேஷ்(20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.