அவனியாபுரத்தில் இருதரப்பினர் இடையே பிரச்சினை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடாமல் பணிகள் தொடங்கியதால் பரபரப்பு
மதுரை அவனியாபுரத்தில் இருதரப்பினரிைடயே பிரச்சினை காரணமாக முகூர்த்தக்கால் நடாமலேயே ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை அவனியாபுரத்தில் இருதரப்பினரிைடயே பிரச்சினை காரணமாக முகூர்த்தக்கால் நடாமலேயே ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரை அவனியாபுரத்தில், பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இதனை தொடர்ந்து, பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். பாரம்பரிய முறைப்படி நடக்கும் இந்த ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவனியாபுரத்தில் நேரடியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இருக்கிறது. அதற்கான பணிகளும் தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதற்கிடையே, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அவனியாபுரம் கிராம மக்கள் மற்றும் கமிட்டியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகூர்த்தக்கால்
இந்தநிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக முகூர்த்தக்கால் நடும் பணிகள் 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. அதன்பின்னர் அங்கு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுபோல், அவனியாபுரத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முகூர்த்தக்கால் எதுவும் நடாமல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி விட்டது. இது அப்பகுதி மக்கள் மற்றும் கிராம கமிட்டியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டு
இத்தனை வருடங்கள் பாரம்பரிய முறைப்படி முகூர்த்தக்கால் நடப்பட்டு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வந்துள்ளது. ஆனால், பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் சரிவர நடத்தவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளின் பரிசோதனைக்கான இடத்தில் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.