மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்
பெரியகுளம் அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி ஹைஸ்கூல் சாலையில் நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஹரி ஜெகன் (வயது 23), விக்னேஸ்வரன் (19), தனசேகரன் (18), சுரேஷ் (50), மற்றொரு தரப்பை சேர்ந்த அஜித், செல்வா ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் ஆர்.டி.ஓ. சிந்து, தாசில்தார் காதர்ஷரீப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் வடுகப்பட்டியில் குவிக்கப்பட்டனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து வடுகப்பட்டி ஹைஸ்கூல் தெருவை சேர்ந்த ஹரி ஜெகன் என்பவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாதேஷ், ஆண்டவர், குமார், சுரேந்தர், சந்துரு, கார்த்திக் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் வடுகப்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த சந்திரகுமார் (55) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் முருகன், பிரகாஷ், ஆதித்யா, சுப்பிரமணி, அருண்பாண்டி, விக்னேஷ் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை ஒரு தரப்பினர் ஹைஸ்கூல் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.