இருதரப்பினர் இடையே மோதல்; சிறுவனுக்கு கத்திக்குத்து
மயிலாடுதுறை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்விரோதம்
மயிலாடுதுறை அருகே நீடூர்-கங்கணம்புத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 50). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாசாமி மகன் ராமகிருஷ்ணன் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் தனது நண்பர் ரஞ்சித்(27) என்பவருடன் சேர்ந்து மதியழகன் மளிகை கடை அருகில் நின்றுள்ளார்.
அப்போது மளிகை கடையை ராமகிருஷ்ணன் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் மதியழகனுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அப்போது மதியழகன் இரும்பு பைபால் ராமகிருஷ்ணனை தாக்கியுள்ளார். இதில் ராமகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
2 பேர் கைது
மேலும் மதியழகனின் மனைவி ஜெயந்தி அவர்கள் மீது மிளகாய் பொடி தூவியுள்ளார். அப்போது ராமகிருஷ்ணனும், ரஞ்சித்தும் பதிலுக்கு தாக்கியுள்ளனர். அந்த நேரத்தில் ராமகிருஷ்ணன் தான் வைத்திருந்த கத்தியால் மதியழகனை குத்த முயற்சித்துள்ளார். இதனை பார்த்தவுடன் மதியழகனின் மகன் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது சிறுவனின் கால் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த ராமகிருஷ்ணன் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் மதியழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அதேபோல மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அந்த பகுதியில் மேலும் பிரச்சினைகள் எழாதவாறு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.