பெரியகுளத்தில் இரு தரப்பினர் மோதல்:போலீஸ் நிலையம், பஸ் மீது கல்வீசி தாக்கிய 60 பேர் கைது:பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு


பெரியகுளத்தில் இரு தரப்பினர் மோதல்:போலீஸ் நிலையம், பஸ் மீது கல்வீசி தாக்கிய 60 பேர் கைது:பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் இரு தரப்பினர் மோதலில், போலீஸ் நிலையம், பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

இரு தரப்பினர் தகராறு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி அன்று இரவு பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியில் இருந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர்.

இதேபோல் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினரும் மாலை அணிவிக்க சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்வீச்சு-தாக்குதல்

அப்போது போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. அதில் அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் தென்கரை தண்டுபாளையம் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் சிலரை பிடித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீஸ் நிலையத்தின் முன்பு வாலிபர்கள் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையம் மீது சரமாரியாக கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜீப் மற்றும் 108 ஆம்புலன்ஸ், மோட்டார்சைக்கிள்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின.

பஸ் கண்ணாடி உடைப்பு

இதையடுத்து பெரியகுளம் புதிய பஸ் நிலையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சை மறித்து அதன் கண்ணாடியையும் உடைத்தனர். போலீஸ் நிலையம் மீது கற்கள் வீசியதில் அய்யண சக்கரவர்த்தி, சுருளிவேல், சரவணன், சதாம் உசேன், கவாஸ்கர் ஆகிய 5 போலீசார் காயம் அடைந்தனர். பின்னர் போலீசாா் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி சென்று சிலரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாா்வையிட்டார். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

60 பேர் கைது

இந்நிலையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட போலீசார் பெரியகுளத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அம்பேத்கர் சிலை அருகே உள்ள கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. பெரியகுளத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும் மாற்றுப் பாதையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

பெரியகுளத்தில் உள்ள மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல், பஸ், ஜீப், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு, போலீசாரை தாக்கியது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Related Tags :
Next Story