நல்லூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு வரவு-செலவு கணக்குகளை முறையாக காண்பிக்கவில்லை தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
வரவு-செலவு கணக்குகளை முறையாக காண்பிக்கவில்லை என்று நல்லூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் ஆதரவு கவுன்சிலர்கள், ஒன்றிய நிர்வாகத்தில் முறையாக வரவு- செலவு கணக்குகள் காண்பிக்கப்படவில்லை. ஒன்றிய பொது நிதியில் இருந்து வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பது இல்லை. பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பது உள்ளிட்ட தங்களின் வார்டுகளில் நடக்கும் பணிகளை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமல், அமைச்சர் கணேசன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளிடம் தெரிவித்து பணிகள் நடைபெறுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளை ஒன்றிய நிர்வாகம் புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டினர்.
தர்ணா
மேலும், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, தி.மு.க., ஆட்சி அமைத்ததில் இருந்து உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாாிகள் போதிய விளக்கம் அளிக்காததால் அதிருப்தி அடைந்த சுயேச்சை கவுன்சிலர் சிவக்குமார், அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வரும்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாது என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறினர்.
இதனை ஏற்க மறுத்த கவுன்சிலர் சிவக்குமார், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்தது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் இணைந்து அமைச்சர் கணேசன் மீது குற்றம் சாட்டியதால் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.