அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து
சேலத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சேலத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பிறந்த நாள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 69-வது பிறந்த நாளை சேலத்தில் கொண்டாடினார். இதையொட்டி அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் பிரமாண்டமான கேக்குகளை வெட்டி, கட்சியினர், பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜமுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உடன் இருந்தார்.
சீர்வரிசை தட்டுகள்...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் கட்சியினர் சீர்வரிசை தட்டுகளுடன் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ஊர்வலமாக சென்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி 125 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் மற்றும் பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் பாண்டியன், 49-வது வட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சங்கர், கவுன்சிலர் மோகனபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.