78 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் 78 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் 78 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போது தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி கடந்த 15-ந் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து பெண்களின் வங்கிக்கணக்குகளில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டது.
இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொகை வரவு வைக்கப்படாமல் இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ஏராளமானவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். அதில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
78 ஆயிரம் பேருக்கு..
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே அவர்களின் முகவரிக்கு வாழ்த்து கடிதம் அனுப்ப உள்ளார்.
இதற்காக வேலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக இத்திட்டத்தில் பயன்பெறும் 78 ஆயிரம் பெண்களுக்கு முகவரியுடன் கூடிய வாழ்த்து கடிதம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதை தாலுகா வாரியாக பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தகடிதம் தபால்துறை மூலம் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உழைப்புத்தொகை
அந்த கடிதத்தில், ''இனி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக்கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் என பெண்களின் பல மணி நேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்கு தரப்படும் அங்கீகாரம் இத்தொகையாகும்.
இது உங்களுக்கான உதவித்தொகை அல்ல. உரிமைத்தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத்தொகை'' என குறிப்பிடப்பட்டுள்ளது.