காங்கிரஸ் நிர்வாகி அடித்துக்கொலை தாய், தம்பி வெறிச்செயல்


காங்கிரஸ் நிர்வாகி அடித்துக்கொலை தாய், தம்பி வெறிச்செயல்
x

காங்கிரஸ் நிர்வாகியை அவரது தாய் மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து அடித்துக்கொன்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்தவர் வேம்பு குரு. இவருடைய மனைவி லட்சுமி (வயது 59). இவர்களுக்கு மாரிசெல்வம் (30), மணிகண்ட சங்கர் (25) ஆகிய 2 மகன்கள் உண்டு.

விவசாயியான மாரிசெல்வம் கருங்குளம் வட்டார காங்கிரஸ் செயலாளராக இருந்தார். இவர் அடிக்கடி பணம் கேட்டு தாயார் லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார்.

தாயிடம் பணம் கேட்டு தகராறு

கடந்த 3-ந் தேதி மாரிசெல்வம் தாயார் லட்சுமியிடம் மீண்டும் பணம் கேட்டார். ஆனால் லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த லட்சுமி, இளைய மகன் மணிகண்ட சங்கர் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரிசெல்வத்தை கம்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, மாரிசெல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் மாரிசெல்வம் பரிதாபமாக இறந்தார்.

தாய்-தம்பி கைது

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, மணிகண்ட சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story