பா.ஜனதாவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி


பா.ஜனதாவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி
x
தினத்தந்தி 24 Feb 2024 2:09 PM IST (Updated: 24 Feb 2024 2:21 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தலைமையகத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பா.ஜ.கவில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பா.ஜ.கவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதனை காங்கிரஸ் கட்சி மறுத்து வந்தது.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.

விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் அவர், விஜயதாரணி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story