காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம்: முதல்-அமைச்சர் நேரில் அஞ்சலி


காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம்: முதல்-அமைச்சர் நேரில் அஞ்சலி
x

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு சென்று திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. (வயது 46)

திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்துக்கு (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு) வந்தார்.

மாரடைப்பு

நேற்று காலையில் அவர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்தார். காலை 10 மணிக்கு மேல், திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுவதாக உடன் இருந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாகவும் கூறி உள்ளார்.

பகல் 11 மணி அளவில் உடன் இருந்தவர்கள் அவரை ஈரோடு கே.எம்.சி.ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததை டாக்டர்கள் முறைப்படி அறிவித்தனர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் குவிந்தனர்

எம்.எல்.ஏ. மரணம் அடைந்த தகவல் பரவிய சிறிது நேரத்திலேயே பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் கச்சேரி வீதியில் உள்ள வீடு முன்பு குவிந்தனர்.

கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெராவின் உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள், கட்சி தொண்டர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

திருமகன் ஈவெரா மரண செய்தி அறிந்ததும், அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இருந்து உடனடியாக ஈரோடு வந்தார்.

முதல்-அமைச்சர் அஞ்சலி

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டார்.

விமானத்தில் கோவை வந்தடைந்த அவர் காரில் ஈரோட்டுக்கு வந்தார். இரவு 10.05 மணி அளவில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு வந்தார். அங்கு திருமகன் ஈவெராவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஆறுதல்

திருமகன் ஈவெராவின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தாய் வரலட்சுமி, தம்பி சஞ்சய் சம்பத் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் கூறினார்.

அப்போது அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், மதிவேந்தன், காந்தி, செந்தில் பாலாஜி, தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., விஜய்வசந்த் எம்.பி. ஜோதிமணி எம்.பி., முன்னாள் எம்.பி. கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

குடும்பம்

மரணம் அடைந்த திருமகன் ஈவெராவுக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமணா என்ற மகளும் உள்ளனர்.

திருமகன் ஈவெரா திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார் . தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வி.கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வி.கே.சம்பத். இவருடைய மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் -வரலட்சுமி தம்பதியரின் மூத்த மகனாக திருமகன் ஈவெரா. காங்கிரஸ் கட்சியில் தீவிர உறுப்பினராக பணியாற்றி வந்தார். 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி வகித்தார். இறுதியாக கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

தேர்தல் வெற்றி

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 37 ஓட்டுகள் பதிவாகியிருந்தது. இதில்

67 ஆயிரத்து 300 ஓட்டுகள் திருமகன் ஈவெரா பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியின் த.மா.கா. வேட்பாளர் யுவராஜா 58 ஆயிரத்து 396 ஓட்டுகள் வாங்கினார். இதன் மூலம் 8 ஆயிரத்து 904 ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருமகன் ஈ.வெ.ரா. மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா. மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத், தந்தையார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த திருமகன் ஈவெரா. 2021-ம் ஆண்டுதான் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் திருமகன் ஈவெரா.

எப்படி தேற்றுவது?

ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றார். அந்த நிகழ்வின் திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள அண்ணன் இளங்கோவனை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

திருமகன் ஈவெரா. மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகனுமாகிய திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மகனை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'எனது நண்பர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தி மிகுந்த பேரதிர்ச்சியை அளித்துள்ளது. திருமகனை இழந்து வாடும் அவரது தந்தை இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story