ராகுல்காந்தி பாதயாத்திரை குறித்து குமரியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2-ம் கட்ட ஆய்வு


ராகுல்காந்தி பாதயாத்திரை குறித்து குமரியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2-ம் கட்ட ஆய்வு
x

ராகுல்காந்தி பாதயாத்திரை பயணம் குறித்து கன்னியாகுமரியில் எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 2-ம் கட்ட ஆய்வு நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ராகுல்காந்தி பாதயாத்திரை பயணம் குறித்து கன்னியாகுமரியில் எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 2-ம் கட்ட ஆய்வு நடத்தினர்.

ராகுல்காந்தி பாதயாத்திரை

நாட்டில் மக்கள் ஒற்றுமையை பலப்படுத்திடவும், வளமான இந்தியாவை உருவாக்கிடவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரை வருகிற 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,570 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு நிறைவடைகிறது.

கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்குவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் எம்.பி.க்கள் குழுவினர் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தனர்.

எம்.பி.க்கள் ஆய்வு

இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தி பாதயாத்திரை தொடர்பாக 2-ம் கட்ட ஆய்வு கன்னியாகுமரியில் நடந்தது. இதில் எம்.பி.க்கள் ஜோதிமணி, ஜெயக்குமார், செல்லக்குமார், விஜய் வசந்த், மாநில நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு குழுவினரும் இருந்தனர். அதாவது அவர்கள் நேற்று காலை கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பாதயாத்திரை தொடர்பான போலீஸ் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் ஆலோசித்தனர்.

ஆலோசனை கூட்டம்

பாதயாத்திரை முன்னேற்பாடு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். தேசிய பொறுப்பாளர் ஆழ்வார் முன்னிலை வகித்தார். தேசிய நிர்வாகிகள் ரம்யா ஹரிதாஸ் எம்.பி, சாண்டி உம்மன், மாநில தலைவர் லெனின் பிரசாத், பொதுச் செயலாளர் அசோத்தாமன், துணை தலைவர்கள் ஜோஸ்வா, பிரவீன், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், பொறுப்பாளர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ராகுல்காந்தி பாத யாத்திரை செல்லும் வழிகளில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அதிகளவில் திரட்ட வேண்டும், பாதயாத்திரை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், கன்னியாகுமரியில் தொடங்கும் பாத யாத்திரை நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story