காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டமாக இன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அறப்போராட்டம் நடந்தது.
அதன்படி திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அறப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் என்.வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். அப்போது அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குணா, மோகன், ரமேஷ், காமராஜ், வினோதினி, மாவட்ட துணைத் தலைவர் அண்ணாச்சி, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.