குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திராவகம் கலந்த குளிர்பானத்தால் மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை:
திராவகம் கலந்த குளிர்பானத்தால் மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் சாவு
படந்தாலுமூடு அருகே மெதுகும்மல் நுள்ளிகாடு பகுதியை சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின் (வயது 11). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மாதம் 24-ந்தேதி மதியம் சீருடை அணிந்த மாணவர் ஒருவர் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்தார். இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவனை நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக மாணவர்களிடம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில கடந்த 17-ந்தேதி மாணவன் அஸ்வின் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தான். இதையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத், இறந்த மாணவன் அஸ்வினின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே, மாணவன் அஸ்வின் சாவுக்கு காரணமாக இருந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி, அதங்கோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநிலச் செயலாளர் பால்ராஜ், உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.