காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி, காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் 63 பேர் கைது செய்யப்பட்டனர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையம் முன்பு ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கனிவண்ணன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் லட்சுமணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சோழன் ரெயிலை மறிக்க முயன்ற வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி சித்ரா செல்வி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்பு உள்ளிட்ட 63 பேர்களை சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்ராஜ் மற்றும் ரெயில்வே போலீசார் ஏராளமானோர் கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து நேற்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சீர்காழி ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.