தோட்டியோடு பகுதியில் நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரசார் சாலை மறியல்; 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 395 பேர் கைது
தோட்டியோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 395 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகியமண்டபம்,
தோட்டியோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 395 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.
நான்கு வழிச்சாலை பணிக்காக தனியாரிடமிருந்து கையப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.
பேச்சுவார்த்தை
எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், குருந்தன்கோடு வட்டார தலைவர் ஜோசப் ஜெரால்ட் கென்னடி, வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் தலைவர் பால்துரை, நிர்வாகிகள் பிரகாஷ் தாஸ், புரோடிமில்லர், திங்கள்நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெமினேஸ், ரீத்தாபுரம் பஞ்சாயத்து தலைவர் எட்வின் ஜோஸ், கல்லுக்கூட்டம் பஞ்சாயத்து தலைவர் மனோகரசிங், முளகுமூடு பஞ்சாயத்து துணை தலைவர் ஜெங்கின்ஸ்,திருநயினார்குறிச்சி அருள்ராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உடனே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
395 பேர் கைது
உடனே குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டதாக 395 பேரை கைது செய்தனர். இதில் 125 பெண்கள் அடங்குவர். இந்த மறியல் போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.