மாநகராட்சி அலுவலகத்தில் காங்கிரசார் அரை நிர்வாண போராட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில் மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் பாஸ்கர், மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையாளர்கள் ஜஹாங்கீர் பாஷா, வெங்கட்ராமன், டிட்டோ, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி, பைஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் போராட்டம்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை சட்டைகளை கழற்றி அரை நிர்வாணமாக நின்று போராட்டம் நடத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மேயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
பாளையங்கோட்டை பஸ் நிலையம் கடந்த 1960-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. அதற்குரிய கல்வெட்டு பஸ்நிலைய வளாகத்தில் இருந்தது. அந்த பஸ்நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து கட்டப்பட்டது. அப்போது காமராஜர் கல்வெட்டு அகற்றப்பட்டது. அதனை மீண்டும் வைக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை கல்வெட்டு வைக்கப்படவில்லை. எனவே உடனடியாக பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் காமராஜர் பெயர் கொண்ட கல்வெட்டை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், பாளையங்கோட்டை மண்டல தலைவர் பி.வி.டி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, வண்ணை சுப்பிரமணியன், மகேந்திரன், அமைப்பு சாரா அணி ஜாகீர் உசேன், சிறுபான்மை பிரிவு அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோடுகள் மோசம்
36-வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய் கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை ஜெயா நகர், பாலாஜி நகர், முபாரக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்து கிடக்கிறது. அங்கு தார் சாலை அமைத்து தரவேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.
தெற்கு பாலபாக்யா நகரை சேர்ந்த பால்ராஜ் தரப்பினர் கொடுத்த மனுவில், ''சாலையின் நடுவில் பாதாள சாக்கடை குழி பழுதடைந்து இருப்பதால், அதனை உடனே சரி செய்து தரவேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
பேட்டையை சேர்ந்த செல்லபொன்னு கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் பொது கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என்றும், ஜெயா நகர் பொது நல சங்கத்தினர் கொடுத்த மனுவில் முபாரக் நகர் குடியிருப்பில் உள்ள நுண்ணுரம் செயலாக்க மையத்தில் துர்நாற்றம் வீசுவதால் அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளனர்.
வேகத்தடை
பா.ஜனதா கட்சியை சேர்ந்த பாலகங்கா திலகர் கொடுத்த மனுவில், ''கொக்கிரகுளம் கிருஷ்ணன் கோவில் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றும், நெல்லை மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் அளித்த மனுவில், ''டவுன் காட்சி மண்டபம் அருகில் தெற்கு மவுண்ட் ரோட்டில் தடிவீரன் கோவில் சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.