கருப்பு பட்டத்துடன் வந்த காங்கிரசார் கைது
திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டத்துடன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திகிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வானில் கருப்பு பட்டம் விடும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்து இருந்தனர். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை இதுவரை தொடங்காததை கண்டிக்கும் வகையில் செங்கல் பரிசு கொடுக்கும் போராட்டம், சமையல் கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்தும் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டிக்கும் வகையில் மோடிக்கு விறகு பரிசு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு நூதன போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். போராட்ட அறிவிப்பு எதிரொலியாக, நேற்று அதிகாலையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் துரை மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணியை தொடங்காத மத்திய அரசை கண்டித்தும், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது, கருப்பு நிற பட்டம், செங்கல், விறகுகள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியினர் கைகளில் ஏந்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வடக்கு போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்தனர்.