பொது இடங்களில் 601 சிலைகள் பிரதிஷ்டை


பொது இடங்களில் 601 சிலைகள் பிரதிஷ்டை
x

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 601 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 601 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

601 சிலைகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு வண்ணங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழா நிறைவடைந்தவுடன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து பூசாரிகள் பேரவைகள் சார்பில் வருகிற 3-ந் தேதி, மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் 4-ந் தேதியும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் வழியாக செல்லும் போது அதிக கோஷம் எழுப்பக்கூடாது. வணிக நிறுவனங்களை மூட சொல்லக்கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. எந்தவித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

பூக்கள் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் விற்பனை நன்றாக இருந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால், பூக்கள் விலை அதிகரித்தது.

ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லை ரூ.1,000, சம்பங்கி ரூ.350, அரளி ரூ.450, சாமந்தி ரூ.400, ரோஜா ரூ.500-க்கு விற்பனையானது. மேலும் பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது. நேற்று பெண்கள் உள்ளிட்டோர் வீடுகளில் பூஜை செய்ய சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர்.



Next Story