500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. 3 அடி உயரம் முதல் 9 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்துஅமைப்புகள், அந்தந்த பகுதி அமைப்பினர் சார்பில் முக்கிய வீதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளுக்கு அப்பகுதியினர் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதையொட்டி மாவட்ட போலீஸ்துறை சார்பிலும், அந்தந்த பகுதியினர் சார்பிலும் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரளாக சென்று வழிபட்டு வருகின்றனர்.
500 சிலைகள்
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:- இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 40, ராமேசுவரம் 25, உச்சிப்புளி 40, திருப்புல்லாணி 23, பரமக்குடியில் 60, சாயல்குடி 30, மண்டபம் 18, பாம்பன் 17, திருவாடானை 5, ஆர்.எஸ்.மங்கலம் 10 உள்பட மாவட்டம் முழுவதும் 500 சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கழுகு விநாயகர், சிம்ம விநாயகர், கஜமுக விநாயகர், வீர விநாயகர், வெற்றி விநாயகர் என பல்வேறு அவதாரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் நாளையும் (1-ந்தேதி), ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி, தொண்டி, ஏர்வாடி ஆகிய பகுதிகளில் 2-ந் தேதியும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அரசின் வழிகாட்டுதலின்படி சுற்றுசூழல் விதிகளை பின்பற்றி இந்த விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.