தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய இடத்தில் தனிநபர்கள் கட்டிடம் கட்ட முயற்சி; தேனியில் மீண்டும் பரபரப்பு


தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய இடத்தில் தனிநபர்கள் கட்டிடம் கட்ட முயற்சி; தேனியில் மீண்டும் பரபரப்பு
x
தினத்தந்தி 24 May 2023 2:30 AM IST (Updated: 24 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய இடத்தில் தனிநபர்கள் கட்டிடம் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி

தேனியில் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய இடத்தில் தனிநபர்கள் கட்டிடம் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீயணைப்பு நிலையம்

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில், தீயணைப்பு நிலையம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டிடம் கட்டுவதற்கு அரசுக்கு நிதி கேட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

இந்தநிலையில் அந்த நிலத்தில் தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகை கடந்த மாதம் மாயமானது. இதுகுறித்து தீயணைப்பு துறை சார்பில் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், தனிநபர் ஒருவர் அந்த நிலத்துக்கு உரிமை கோரினார். இதனால், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிலம் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடம் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய அரசு நிலம் என்பது உறுதி செய்து தெரிவிக்கப்பட்டது. நிலம் அளவீடு செய்த மறுநாள், அந்த நிலத்தில் சிலர் கட்டிடம் கட்டுவதற்காக பேவர்பிளாக் கற்களை கொண்டு வந்து இறக்கினர்.

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் அங்கு சென்ற போது, அங்கிருந்த 2 பேர் தீயணைப்பு துறையினரிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிடம் கட்ட முயற்சி

இதற்கிடையே தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய இடத்தில் நேற்று எம்-சாண்ட் மணல் கொண்டு வந்து இறக்கப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் சிலர் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் கட்டுமான பணியில் ஈடுபட முயன்றவர்கள் ஒரு மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு துறைக்கு ஒதுக்கிய இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story