மின்சாரம் தாக்கி கட்டிட காண்டிராக்டர் பலி
கழுகுமலை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட காண்டிராக்டர் பலியானார்.
கழுகுமலை:
கேரளா மாநிலம் கொல்லம் கன்னிமேல்சேரி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 52). இவர் அங்கு கட்டிட காண்டிராக்டராக இருந்து வந்தார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சி.ஆர்.காலனி பகுதி ஆகும். இந்த நிலையில் அனில்குமார் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். இரவில் வீட்டு வாசலில் இரும்பு கதவு பகுதியில் உள்ள பல்பு எரியவில்லை. இதனால் அனில்குமார் அதை மாற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அனில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கட்டிட காண்டிராக்டர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.