குளத்தில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு


குளத்தில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு
x

ஆரணி அருகே குலதெய்வ கோவிலுக்கு வந்த கட்டிட மேஸ்திரி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே குலதெய்வ கோவிலுக்கு வந்த கட்டிட மேஸ்திரி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட மேஸ்திரி

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 60), கட்டிட மேஸ்திரி. இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குலதெய்வ வழிபாடு செய்வதற்காக சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

இன்று பகலில் வெள்ளேரி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக குடும்பத்தினர் தயார் செய்து கொண்டிருந்தனர். சுந்தரமூர்த்தி அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

குளத்தில் மூழ்கி சாவு

அப்போது அவர் திடீரென குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த உறவினர்கள் அவரை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் சுந்தரமூர்த்தியை தேடினர். சுமார் 2 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர்.

கரையோரம் இருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் சுந்தரமூர்த்தியின் உடலை பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டார் என கூறினர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்தர் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story