ரூ.8¾ கோடியில் 128 சாலைகள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும்
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.8¾ கோடியில் 128 சாலைகள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.8¾ கோடியில் 128 சாலைகள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.
நகர்மன்ற கூட்டம்
திருத்துறைப்பூண்டி நகர்மன்ற கூட்டம் தலைவர் கவிதா பாண்டியன், தலைமையில் நடந்தது. ஆணையர் பிரதான்பாபு (பொறுப்பு) முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், நகர அமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, பொதுப்பணி மேற்பார்வையாளர் ராஜேஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டனர்.
128 சாலை பணிகள்
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசியதாவது:- திருத்துறைப்பூண்டியில் கஜா புயலுக்கு பிறகு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 128 சாலைகள் அமைக்க அரசிடம் இருந்து ரூ.8 கோடியே 67 லட்சம் நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
மின்விளக்கு
பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
சுசீலா(காங்கிரஸ்):- தங்கள் பகுதியில் கூடுதலாக குப்பைகள் அள்ள வேண்டும். மின்விளக்கு சரி செய்ய வேண்டும்.
ராமலோகஈஸ்வரி(மார்.கம்யூ):- தங்கள் பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும். 2 பாலங்கள் கட்டித்தர வேண்டும்.
லட்சுமி (இந்திய.கம்யூ):- சிங்களாந்தியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரவேண்டும்.
சுகாதார வளாகம்
தேன்பவானி (தி.மு.க.):- பூச்சட்டி குளத்தில் கம்பி வேலி அமைக்க வேண்டும். முள்ளாட்சி மாரியம்மன் கோவில் அருகில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.
உஷா (அ.தி.மு.க.):- பண்டிதர் சாலை மற்றும் உப்பு குல தெரு சாலை சீரமைக்க வேண்டும்.
மலர்க்கொடி (அ.தி.மு.க.):- எனது வார்டில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை புதிதாக அமைக்க தர வேண்டும். மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
படித்துறை
தாஜுதீன்(தி.மு.க.):- காசுகடை தெரு பகுதியில் தனியார் நிறுவனங்களின் கழிவுநீர் பொதுஇடங்களில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க வேண்டம்.
சரவணன் (சுயே):- எனது பகுதியில் உள்ள குளங்களில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.
எழிலரசன் (காங்கிரஸ்):- நகரம் முழுவதும் கூடுதலாக மின்விளக்கு அமைக்க வேண்டும்.
ஜெயபிரகாஷ் (துணைத் தலைவர்):- புளியங்குளம் குளத்தில் படித்துறை கட்ட வேண்டும். சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தர வேண்டும்.
கோரிக்கைகள்
பிரதான்பாபு (நகராட்சி ஆணையர்):- நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.