நீலகிரியில்1,416 பசுமை வீடுகள் கட்டும் பணிகள் தீவிரம்-கலெக்டர் அம்ரித் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.3 லட்சம் மதிப்பு
நீலகிரி மாவட்டம், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சி பன்னிமாரா பகுதியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா எனப்படும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், அண்ணா நகர் பகுதியில், பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளில் மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைவில் தொடங்கி தரமான முறையில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1,416 பசுமை வீடுகள்
நீலகிரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019 - 2020-ம் ஆண்டில் 971 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு, 903 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021-2022-ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 1,507 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும், 2020-2021-ம் ஆண்டில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயா, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் இருந்தனர்.